Last Updated:
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. மலையேற்ற நடவடிக்கைகள் ரத்து. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
கடந்த 22 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அனந்த்நாக் பகுதியை சேர்ந்த ஆதில் தோகர் என்பவரும், திரால் பகுதியை சேரந்த ஆசிஃப் ஷேக் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவரில், ஆதில் தோகர் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் -இ- தொய்பா அமைப்பில் ஆயுதப்பயிற்சி பெற்றவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், திரால் மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இதனை தொடர்ந்து, குல்காம் பகுதியில் உள்ள ஜாகிர் அகமது என்பவருக்கும் இத்தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. குல்காமில் உள்ள அவரது வீடும் இடித்து தரைமட்டாக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கையை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உதம்பூர், பூஞ்ச், ரஜவுரி உள்ளிட்ட பகுதிகளில் குகை மற்றும் மறைவிடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமடைந்து இருப்பதால், மலை ஏறுபவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடுகள் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி மலையேற்ற நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளை அட்டாரி-வாகா எல்லை வழியாக அனுப்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Jammu and Kashmir
April 26, 2025 4:29 PM IST


