Last Updated:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 55 வயது காவலர் சுக்தேவ் மேத்தா, பள்ளி சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் தேர்வு பாதுகாப்பு பணியில் இருந்த 55 வயது காவலர் ஒருவர் பள்ளி சிறுமி ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், வஸ்தானியா அவுர் ஃபோகானியா மதரஸா தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்விற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதில், பணியில் இருந்த சுக்தேவ் மேத்தா (55) என்ற காவலர், தேர்வு எழுத வந்த சிறுமியிடம் காதல் கடிதம், ரோஜா மற்றும் தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தேர்வை எழுத முடியாமல், மிகுந்த மன உளைச்சலுடன் வீட்டிற்கு சென்று அழுதுள்ளார். அப்போது அவரது பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் நடந்தவற்றை கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அந்தப் பகுதி காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், சுக்தேவ் மேத்தா எனும் காவலர் சிறுமிக்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதி காதல் கடிதம் கொடுத்ததாகவும், அத்துடன் ஒரு ரோஜாவையும், அவரது செல்போன் நம்பரையும் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை பெற்ற காவல்துறையினர் அதன் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை எனும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. அதேசமயம், காவல் நிலைய பொறுப்பாளர் விபின் குமார், சிறுமியின் குடும்பத்தினரிடமிருந்து எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். மூத்த அதிகாரிகள் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், பொருத்தமான ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
July 08, 2025 7:05 PM IST
பள்ளி சிறுமிக்கு ரோஜாவுடன் காதல் கடிதம் கொடுத்த 55 வயது காவலர்… எஃப்.ஐ.ஆர். போடாமல் விசாரிக்கும் போலீஸ்


