Last Updated:
ஆந்திர மாநிலத்தில் உள்ள பள்ளியில் சிகரெட் புகைத்ததோடு மட்டுமின்றி, கண்டித்த ஆசிரியரை தாக்கியதால் சம்பந்தப்பட்ட மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் அரசுப் பள்ளியில் சிகரெட் புகைத்ததை தட்டிக்கேட்ட ஆசிரியரை, 10 ஆம் வகுப்பு மாணவர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. ஆசிரியர்களுக்கு எதிராக ரவுடியிசத்தில் ஈடுபடும் மாணவர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டப்படுமா?
ஆசிரியருக்குப் பயந்து பள்ளிக்கூடம் போன மாணவர்களின் காலமெல்லாம் காணாம போச்சு, பதிலுக்கு மாணவர்களுக்குப் பயந்து, ஆசிரியர் வேலையே வேண்டாம் என எழுதி கொடுத்துட்டு போகிறதுதான் இப்போ புதுசு. அப்படியொரு சம்பவம்தான் ஆந்திராவில் அரங்கேறி, நாடு முழுக்க தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் NTR மாவட்டத்தின், பாபுலபாடு மண்டலத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியரைக் கொடூரமாக தாக்கிய மாணவனின் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தன்று பள்ளி மாணவர்கள் மூவர், கழிவறையில் சிகரெட் புகைத்து எல்லைமீறியுள்ளனர். அதைப் பார்த்த ஆசிரியர் ரவீந்திரர், சம்பந்தப்பட்ட மாணவர்களின் வகுப்பாசிரியையிடமும், பள்ளி தலைமை ஆசிரியையிடமும் புகார் அளித்துள்ளார். அதில் மூன்று மாணவர்களை வகுப்பறையில் வைத்தே கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், புகார் அளித்த ஆசிரியர் ரவீந்திரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிலொரு மாணவன், சீறிப்பாய்ந்து ஆசிரியரின் நெஞ்சில் ஓங்கி குத்தி நிலைகுலைய வைத்துள்ளார்.
பள்ளிக்கூடத்தில் சிகரெட் புகைத்ததோடு மட்டுமின்றி, கண்டித்த ஆசிரியரை தாக்கியதால் சம்பந்தப்பட்ட மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர். மாணவனாக இருந்தாலும் இதுபோன்ற எல்லைமீறல்களைக் கண்டிக்காமல் விட்டால் அவரது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று அவரது பெற்றோரும் உணர வேண்டும்.


