ஜோகூர்:
மாநிலத்தின் பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் துன்புறுத்தல் அல்லது பகிடிவதை சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜோகூர் மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்த குழு பள்ளிகள், பெற்றோர், சமூகங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இடையே இணைப்புச் செயல்பாடாக செயல்படும் என மாநிலக் கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் அஸ்னான் தாமின் கூறினார்.
“பள்ளிகளில் நடைபெறும் துன்புறுத்தல், மாணவர்களின் உணர்ச்சி நலன் மற்றும் பாதுகாப்பை மட்டுமின்றி, அவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் பாதிக்கும். இதை மேலும் மோசமடையும் முன் தடுப்பதற்காக மாநிலக் கல்வித் துறை மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த சிறப்பு குழுவை அமைத்துள்ளோம்,” என அவர் கூறினார்.
மேலும், இந்தக் குழு தொடர்ந்து கண்காணிப்பு, எளிதாக புகார் செய்யும் வழிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை உதவி போன்றவற்றில் கவனம் செலுத்தும். அத்தோடு குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எல்லா தரப்பினரும் இணைந்து, பள்ளிகள் பாதுகாப்பான, ஒற்றுமையான, மற்றும் குழந்தைகள் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் சூழலை கொண்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.




