Last Updated:
மகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு காரணமாக, பள்ளிகளில் கட்டாய இந்தி கற்பித்தலை தற்காலிகமாக நிறுத்துவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா ப்யூஸே அறிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை தற்காலிகமாக கைவிடுவதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா ப்யூஸே அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பில் இருந்து இந்தி மொழி கட்டாயம் கற்பிக்கப்படும் என அம்மாநில அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை மறந்து மகாராஷ்டிராவின் நலன்களுக்காக இணைந்து போராடத் தயார் என்றும் உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா ப்யூஸே, இந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
பள்ளிகளில் மராத்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் எனக்கூறினார். அதே சமயம், மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என்றும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவே முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.


