எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஓமன் கடலோரத்திற்கு அருகிலுள்ள ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்தியா கடும் கண்டனம்
பாலாவ் கொடி ஏந்திய செட்டெபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படை நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா மற்றும் தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் அடங்குவதாக இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிராந்தியத்தில் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள்
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறுகையில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்கிறது.
மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள் உடனடியாக நாடு திரும்புவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

