நாக்பூர் – பறவை மோதியதையடுத்து, இண்டிகோ விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
நாக்பூர் – கோல்கத்தா இடையே சேவை செய்து வந்த இண்டிகோ நிறுவனம், செப்டம்பர் 2, செவ்வாய்க்கிழமை, நாக்பூரிலிருந்து 272 பயணிகளுடன் கோல்கத்தா நோக்கி விமானத்தை இயக்கியது.
புறப்பட்டு சில நேரத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் முன்பகுதியில் பறவை மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலால், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானி உடனடியாக விமானத்தை நாக்பூர் விமான நிலையத்துக்கு திருப்பினார். சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
பின்னர், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். விமானத்தை ஆய்வு செய்தபோது, அதன் முன்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
சம்பவத்திற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.




