இந்த பருவத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க ஆர்வமுள்ள கிராமவாசிகள், வர்த்தகர்கள் மற்றும் வெளியாட்கள் வைரக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்பெற்ற ஜோனகிரி, துக்காலி மற்றும் பெரவலி மண்டலங்களுக்கு வருகை தருகிறார்கள். “ஒரு கல் எடுத்தாலும்கூட, அது உங்கள் அதிர்ஷ்டத்தையே மாற்றக்கூடும்” என்று தெலங்கானாவின் மஹபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் பாரத் பலோட் கூறுகிறார்.
“முதல்முறையாக 2018ம் ஆண்டில் இங்கு எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. அதில் ஒன்றை இந்த ஆண்டு ரூ.8 லட்சத்திற்கு விற்றேன்” என்று கூறும் பலோட், சாதாரண விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறும் கதைகள், பலரது ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். வைர வேட்டை குறித்த வீடியோக்களைப் பார்த்தபிறகு ஜொன்னலகிரிக்குச் சென்றதாகக் கூறும் சித்தூரைச் சேர்ந்த விவசாயி கோதாவரியம்மா, “எனக்கு ஒன்று கிடைத்தால்கூட அது என் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்” என்கிறார்.
கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் வைரங்கள் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நிலவுவதாக கர்னூல் டிஐஜி கோயா பிரவீன் தெரிவிக்கிறார். “வேலைக்காக இடம்பெயர்ந்த மக்கள், மழைக் காலங்களில் திரும்பி வந்து வைரங்களை அறுவடை செய்கிறார்கள். கிராமவாசிகள் நிலங்களைத் தங்களுடையது என்று கூறி வருவதாகவும், சில சமயங்களில் வெளியாட்கள் உள்ளே நுழைவதைத் தடுப்பதாகவும், ஆனால் இதுவரை ‘பெரிய தகராறுகள் அல்லது குற்றச் சம்பவங்கள் எதுவும்’ பதிவாகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கர்னூல் மாவட்டம் மடிகேரா மண்டலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசுலு என்ற விவசாயி, அரிய வைரத்தைக் கண்டுபிடித்துள்ளார். அது ஒன்று மட்டுமே ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துக்கலி மண்டலத்தின் லோயர் சிந்தல்கொண்டா கிராமத்தில், பிரசன்னா என்ற பெண் விவசாயி தனது விவசாய நிலங்களை உழுது கொண்டிருந்தபோது பளபளப்பான கல்லைக் கண்டார். அதை உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் ரூ.13.5 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
ராயலசீமாவின் ஜோனகிரி, பகிடிராய், எர்ரகுடி மற்றும் உப்பர்லபள்ளி பகுதிகளில் மழை மாதங்களில் வைர வேட்டை உச்சத்தில் இருக்கும். ஏனெனில், புதையுண்ட கற்கள் கனமழையில் வெளிப்படும். சிலருக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும், பெரும்பாலான கிராமவாசிகள் பல நாட்கள் தோண்டிய பிறகும் வெறுங்கையுடன் திரும்பி வருகிறார்கள். ஆனால், அவ்வப்போது கிடைக்கும் வைரம், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்கத் தூண்டுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், சில உள்ளூர்வாசிகள், சிறிய அளவில் பொது ஏலங்களை நடத்துவதன் மூலமோ அல்லது சமூக ஊடகங்களில் தங்கள் கண்டுபிடிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலமோ, சிறந்த விலைகளைப் பெறுகின்றனர். மேலும், நியாயமான விலையை உறுதி செய்வதற்கும் கிராம மக்களை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்கும் அரசாங்கம் இதில் தலையிட வேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்தப் பகுதியின் வைரக் கலாச்சாரம் வரலாற்றில் வேரூன்றியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ராயலசீமாவில் கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் விஜயநகர மன்னர்களின் அரச கருவூலங்களுக்கு சென்றதாக பல நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கிராமவாசிகள் இந்த வேட்டையை “வைர விவசாயம்” போல நடத்துகிறார்கள். விலைமதிப்பற்ற ரத்தினங்களைக் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கையில் அவர்கள் மணிக்கணக்கில் வயல்களை தோண்டியும், மண்ணைக் கழுவியும் கற்களை பட்டை தீட்டியும் நேரத்தை செலவிடுகிறார்கள்.
சில நேரங்களில் மதிப்புமிக்க வைரக் கற்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டு, அதிக லாபத்திற்கு மறு விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தபோதிலும், வைர வேட்டை அனந்தபூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களின் பருவகால பாரம்பரியமாக உள்ளது. வழக்கமான விவசாயத்தைப் போலல்லாமல், இது அதிர்ஷ்டம், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும், இந்த மாவட்டங்கள் மீண்டும் ஒருமுறை மறைந்திருக்கும் செல்வங்களைத் துரத்தும் வைரப் புதையலை தேடுபவர்களின் மையமாக மாறுகின்றன.
August 26, 2025 5:18 PM IST

