International
oi-Halley Karthik
இஸ்லாமாபாத்: நமது பக்கத்து நாடான பாகிஸ்தானில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ.7,000-10,000 வரை அதிகரித்திருக்கிறது. ஈரானில் நிலவும் பதற்றமான சூழல்தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டின் பொருளாதாரம், மக்களின் வருமானம் பெரிய அளவுக்கு உயரவில்லை. இப்படி இருக்கையில் தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்க்கொண்டிருக்கிறார்கள்.

முன்பு 12 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4,500 என இருந்தது. இப்போது பலுசிஸ்தான் மாகாணத்தில் ரூ.7,000க்கும், லாகூரில் ரூ.7,500க்கும், ஸ்கார்டு பகுதியில் ரூ.8,200க்கும் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சில பகுதிகளில் ரூ.10,000க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்திய மதிப்பில் அதிகபட்சமாக ரூ.3,500 என சிலிண்டர் விற்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் வரை ரூ.4,500 என்று இருந்த சிலிண்டர் விலை ஒரேயடியாக ரூ.10,000க்கு உயர காரணம், ஈரான் உடனான தனது எல்லையை பாகிஸ்தான் மூடியதுதான். அக்.17ம் தேதியயன்று பாகிஸ்தான் தனது எல்லையில் உள்ள முக்கிய இரு சோதனை சாவடிகளான, கப்த்-ரிம்டன் மற்றும் தஃப்தான் ஆகியவற்றை மூடியது. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லையை மூடியதாக பாகிஸ்தான் கூறியிருக்கிறது.
என்னதான் காரணம் சொன்னாலும், எரிபொருள் தேவை என்று வரும்போது.. ஈரானைதான் பாகிஸ்தான் முழுமையாக நம்பியிருக்கிறது. தினசரி ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் 7,000 மெட்ரிக் டன் எல்பிஜியில் 4,000 டன்னுக்கும் அதிகமான அளவு கப்த்-ரிம்டன் எல்லை வழியாக மட்டுமே வருகிறது. இந்த இறக்குமதி தற்போது முற்றிலும் முடங்கியிருக்கிறது.
எல்லை மூடியதால், அங்கிருந்து வர வேண்டிய எல்பிஜி டேங்கர்கள், பாகிஸ்தானிலிருந்து ஈரானுக்கு போகவேண்டிய வாழைப்பழம், உருளைக்கிழங்கு, அரிசி லாரிகள் என அனைத்தும் அப்படியே தேங்கி நிற்கின்றன. விரைவில் குளிர்க்காலம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் எல்லையை மூடினால், எல்பிஜிக்கு இன்னும் அதிகமான தட்டுப்பாடு ஏற்படும் என்று பாகிஸ்தான் மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். எனவே, இதை சமாளிக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

