பரபரப்பாக தயாராகும் விஜய் அரசின் முதல் பட்ஜெட்..! பெண்கள் எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பு இருக்குமா?
தவெக தலைமையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்று 2 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. எப்போது விஜய் அரசு மாநிலத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும், இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த திமுக ஆட்சியில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஆட்சி அமைந்த உடன் முழுநீள பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் விஜய் தலைமையிலான அரசு 2026-2027ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான பணிகளை விஜய் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே பட்ஜெட் தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சூழலில் தான் 16ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் தாக்கல் குறித்தும் அரசின் திட்டங்கள், நிதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற தகவலை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் மரிய வில்சன் , கடந்த 16 நாட்களாக முதலமைச்சர் விஜய் அனைத்து துறை ரீதியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலாசனை கூட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். தினமும் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் செலவிட்டு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்து இருக்கிறது, வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நல்ல படியாக தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளார். இதன் மூலம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
விஜய் அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என்னென்ன திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தவெக சார்பில் தேர்தலின் போது மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், திருமணத்தின் போது தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் சீர் திட்டம் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மற்ற திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே விஜய் அரசு தமிழக நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்தது என்பதால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறுகிறது.
