Last Updated:
பயிற்சியின் போது விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திரநாத் ஜடேஜா ஆகியோர் பந்துகளை வீசினர்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய அணியின் வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியைத் தவிர்த்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குரூப் பி பிரிவில் அரையிறுதி சுற்றுக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது உள்ளன.
நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை தொடரை விட்டு வெளியேற்றியுள்ளது. அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ரோகித் சர்மா மட்டும் பயிற்சியை தவிர்த்து உள்ளார். அவருக்கு கால் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்த தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது ரோகித் சர்மாவால் சௌகரியமாக உணர முடியவில்லை. பயிற்சியின் போது விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திரநாத் ஜடேஜா ஆகியோர் பந்துகளை வீசினர். இதே போன்று வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்ஷித்ரானா மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் விராட் கோலிக்கு வலை பயிற்சி போது பந்து வீசினார்கள்.
February 27, 2025 3:32 PM IST


