புறநகர் அல்லாத பிற ரயில்களில் சாதாரண, ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் முதல் 500 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 501 முதல் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து ரூபாயும், ஆயிரத்து 501 முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ரூபாயும், 2 ஆயிரத்து 501 முதல் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் படுக்கை வசதி வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, படுக்கை வசதி வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தாலும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபர், அமிர்த பாரத், மகாமனா, கதிமான், அந்தியோதயா, ஜன் சதாப்தி, யுவா எக்ஸ்பிரஸ் உட்பட முதன்மை மற்றும் சிறப்பு ரயில்களுக்கும் இந்த கட்டணத்திருத்தம் பொருந்தும். அதேநேரம், துணை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விதிகளின்படி ஜிஎஸ்டி தொடர்ந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்குத் திருத்தப்பட்ட கட்டணங்கள் பொருந்தும் எனவும், இந்த தேதிக்கு முன் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எந்த மாற்றமும் இன்றி பழைய கட்டணமே பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த கட்டண உயர்வால் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு ஆயிரத்து 450 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் பயணிகள் பிரிவில் மட்டும் ரயில்வே துறைக்கு 92 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
July 01, 2025 6:32 AM IST