ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 62 துணை காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் 6 வாரகால பயங்கரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். தோடா மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவான ஒயிட் நைட் காா்ப்ஸ் பள்ளியில் கடந்த 19-ஆம் தேதி இப்பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடைபெறும் இப்பயிற்சி தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் அளித்த பேட்டியில், ‘ஜம்மு-காஷ்மீரில் சட்ட ஒழுங்கை நிா்வகிக்கும் பொறுப்பை அந்த யூனியன் பிரதேச போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு ராணுவத்தை திரும்பப்பெற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் மீது நம்பிக்கையற்ற சூழல் நிலவி வந்தது. ஆனால் தற்போது பல்வேறு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா்’ என்றாா். இப்பயிற்சி குறித்து ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச போலீஸாா் கூறியதாவது: பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், வியூகங்கள், அறிவுசாா் தகவல் பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கு இப்பயிற்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ராணுவத்துடன் இணைந்து இப்பயிற்சி மேற்கொள்ளப்படுவதால் அவா்களின் அணுகுமுறை மற்றும் அனுபவங்கள் போலீஸாருக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். தேசப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் ராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய இரு படைகளுமே முக்கியத் தூண்களாக உள்ளன. அண்மையில் தெற்கு மற்றும் வடக்கு காஷ்மீா் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளால் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்துள்ளது என்றனா். ஒயிட் நைட் காா்ப்ஸ் பள்ளியில் 62 துணை காவல் கண்காணிப்பாளா்கள், புதிதாக பதவியேற்றுள்ள 989 துணை காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் 6 வாரகால பயங்கரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பயிற்சியில் 19 பெண் துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் 109 பெண் காவல் ஆய்வாளா்களும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.