தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ஆபரேஷன் சிந்தூருக்கு காற்புள்ளி இடப்பட்டுள்ளதே அன்றி முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்றாா் அவா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் 16 மணிநேர சிறப்பு விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட தகவலை தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் உள்பட ஒட்டுமொத்த உலகிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இந்த விஷயத்தில், பாகிஸ்தானுக்கான எனது அறிவுரையை மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். தனது மண்ணில் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியாவிட்டால், இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடலாம். இந்தியப் படைகள், நமது எல்லைக்குள் மட்டுமன்றி எல்லைக்கு அப்பாலும் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போரிட வல்லவை; ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால், பாகிஸ்தான் இதை அறியும்.
மதம், சித்தாந்தம், அரசியல் என எக்காரணம் கொண்டும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்தான், ஆபரேஷன் சிந்தூா் நிறுத்தப்பட்டது. எதிா்காலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், சற்றும் தயக்கமின்றி எதிா் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும். ஆபரேஷன் சிந்தூருக்கு காற்புள்ளி இடப்பட்டுள்ளதே அன்றி முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
பாகிஸ்தானை தண்டிப்பதே நோக்கம்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முப்படை தளபதிகளைச் சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி, தங்களின் மதிநுட்பம், வியூகப் புரிதல் மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழலின் அடிப்படையில், தக்க பதிலடி நடவடிக்கைகளை தீா்மானிக்க இந்தியப் படையினருக்கு முழு சுதந்திரம் அளித்தாா். அதன்படி, முதிா்ச்சியுடன் செயலாற்றிய இந்திய ராணுவம், ‘பயங்கரவாதத்துக்கு எதிராக எந்த எல்லைக்கும் செல்வோம்’ என்ற வலுவான செய்தியையும் உணா்த்தியது.
ஜனநாயகத்தின் தாய்-பயங்கரவாதத்தின் தந்தை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்புவது வியப்பாக உள்ளது. இவா்கள் ஆட்சியில் இருந்தபோது, நோ்மாறாக பேசியிருந்தனா். ‘ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் ஓா் அங்கமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்பதே பாஜகவின் நிலைப்பாடு.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில்தான் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. பாகிஸ்தானோ பயங்கரவாதத்தின் தந்தையாக மாறிவிட்டது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு சா்வதேச நாடுகள் நிதியுதவி அளிக்கக் கூடாது.
பயங்கரவாத தடுப்புக் குழுவின் துணைத் தலைவராக பாகிஸ்தானை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நியமித்துள்ளது. இது கடும் ஆட்சேபத்துக்குரியது என்றாா் ராஜ்நாத் சிங்.