பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் புதையுண்ட பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கை அபாயகரமாக இருப்பதால் அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்டன என்று அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. அனர்த்தம் இடம்பெற்ற மலைப்பகுதி செல்வதற்கு தடை வலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்கா மாகாணத்தில் கடந்த மே 24 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிலச்சரிவின்போது சுமார் 2,000 அடி மலைப்பிரதேசம் மண் மற்றும் பாறைகளால் புதையுண்டது. இதில் 2,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை நடந்த மீட்பு நடவடிக்கைகளில் ஒன்பது உடல்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் நிலச்சரிவு இடம்பெற்ற பகுதியில் மீண்டும் ஒருமுறை நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பப்புவா நியு கினி சுரங்க மற்றும் புவி அபாய திணைக்களம் வெளியிட்ட உள்ளக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

