Last Updated:
தனது கருத்தை மீண்டும் சசி தரூர் வலியுறுத்திய நிலையில், அனைத்து போட்டிகளையும் கேரளாவிற்கே மாற்றிடலாம் என ராஜீவ் சுக்லா கிண்டலாக பதிலளித்தார்
கடுமையான பனிமூட்டத்தால் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டி ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 4வது டி20 போட்டி, அதிக பனிமூட்டம் காரணமாக டாஸ் போடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய பிசிசிஐ துணை தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராஜீவ் சுக்லா, குளிர்காலத்தில் வட இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடுவதில் அதிக கவனம் தேவை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மற்றொரு காங்கிரஸ் எம்.பி,, சசி தரூர், ஜனவரி மாத கிரிக்கெட் போட்டிகளை கேரளாவுக்கு மாற்றலாம் என்றும், அங்குள்ள தட்பவெப்பநிலை, போட்டிகள் நடத்த சாதகமாக இருப்பதாகவும் பரிந்துரைத்தார்.
அதேநேரம், ஒரு மாநிலத்திற்கு மட்டும் அதிக வாய்ப்புகளை தர முடியாது என்று ராஜீவ் சுக்லா கூறினார். ஆனாலும், தனது கருத்தை மீண்டும் சசி தரூர் வலியுறுத்திய நிலையில், அனைத்து போட்டிகளையும் கேரளாவிற்கே மாற்றிடலாம் என ராஜீவ் சுக்லா கிண்டலாக பதிலளித்தார். இதுகுறித்த விவாதத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இருவரும் ஈடுபட்டனர்.
பிசிசிஐ-யின் சுழற்சி கொள்கையின் கீழ், கேரளாவில் ஏற்கனவே ஜனவரி மாதத்துக்கு போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக சுக்லா விளக்கம் தந்தார்.


