கோலாலம்பூர்:
பேராக், பத்து காஜா, கிளினிக் டேசா கம்போங் சுங்கை தெராப் (Klinik Desa Kg Sg Terap) அருகே உள்ள ஈயக் குட்டை ஒன்றில் கார் ஒன்று மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், காரின் உள்ளே பயணிகளோ அல்லது ஓட்டுநரோ யாரும் இல்லை எனத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு (ஜூலை 22) 11:01 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நூர் அகமட் தெரிவித்தார்.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கார் முழுமையாக நீரில் மூழ்கி, அதன் மேற்கூரை பகுதி மட்டுமே வெளியே தெரியும் வகையில் இருந்தது.
வாகனத்தைப் பற்றிய தகவல்களைப் பெறக் காவல் துறையைத் தொடர்புகொண்டபோது, இச்சம்பவம் குறித்து அதுவரை எந்தப் புகாரும் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மிதவை உடைகளை (Personal Flotation Devices) அணிந்துகொண்டு நீரில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், காரின் முன்பகுதி மற்றும் உள்பகுதியைத் தீவிரமாகச் சோதனையிட்டனர்.
சோதனையின் முடிவில் காரில் சிக்கி உயிரிழந்தவரோ அல்லது காயமடைந்தவரோ எவரும் இல்லை என்பதைத் தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரால் வரவழைக்கப்பட்ட இழுவை வாகனம் (Tow truck) மூலம் கார் சுரங்கக் குட்டையிலிருந்து வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.



