Last Updated:
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைத்து, பிப்ரவரி 8 பொதுத்தேர்தல் அறிவித்தார்.
ஜப்பானில் பிரதமராக தாம் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைத்துள்ள சனே தகாய்ச்சி, வரும் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் பிரதமராக இருந்த இஷிபாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, ஜப்பான் இனோவேஷன் கட்சியுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி பதவி ஏற்றார்.
இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் வழக்கமான கூட்டுத்தொடர் கூடியபோது, 465 உறுப்பினர்களை கொண்ட கீழவையை கலைப்பதாக பிரதமர் சனே தகாய்ச்சி அதிரடியாக அறிவித்தார். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்தி, மக்களை சந்தித்து நேரடியாக அவர்களை ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க இருப்பதாகவும் தகாய்ச்சி குறிப்பிட்டார். ஜப்பானில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2028 ஜனவரி மாதம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்ற 3 மாதங்களுக்குள் ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு.. மீண்டும் பொதுத்தேர்தல் அறிவிப்பு!


