கிருஷ்ணகிரி: போதிய மழையின்மை மற்றும் பனியின் தாக்கத்தால் மத்தூர் பகுதியில் பனை மரங்களில் பதநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், பனை வெல்லம் உற்பத்தி 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர், போச்சம்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. குறிப்பாக, மத்தூர் பகுதியில்250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதநீர் இறக்கி பனைவெல்லம் தயாரிக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
100 லிட்டர் பத நீரில் 20 கிலோ: பனை மரங்களில் ஆண் மற்றும் பெண் வகைகள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை ஆண் பனை மரங்களிலிருந்தும், மார்ச் முதல் ஜூன் வரை பெண் பனை மரங்களிலிருந்தும் பதநீர் இறக்கப்பட்டு பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. 100 லிட்டர் பனை வெல்லத்தைக் காய்ச்சினால் சுமார் 20 கிலோ பனை வெல்லம் கிடைக்கும். அதன்படி மத்தூர், மத்தூர் பதி, கோடிபதி, களர்பதி, சாமல்பட்டி, வெள்ளையம்பதி, ஆனந்தூர், ரெங்கனூர், அம்மன் கோவில் பதி உள்ளிட்ட கிராமங்களில் தினசரி 2 டன் வரை பனை வெல்லம் உற்பத்தியாகிறது.
விழிப்புணர்வால் அதிகரிப்பு: இங்கு உற்பத்தியாகும் பனை வெல்லம் 90 சதவீதம் மொத்த வியாபாரிகளுக்கும், 10 சதவீதம் சில்லரை வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்த வியாபாரிகள் மூலம் திருச்செங்கோடு பிரதானச் சந்தைக்கும், அங்கிருந்து கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அண்மைக் காலமாக பனை வெல்லம் பயன்பாட்டால் உடல் நலத்துக்கு ஏற்படும் நன்மை தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக பனை வெல்லத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்தூர் பகுதியில் போதிய மழையின்மை மற்றும் பனியின் தாக்கம் காரணமாக பனை மரங்களில் பதநீர் சுரப்பது குறைந்துள்ளது, இதனால், பனை வெல்லம் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
மூன்றில் ஒரு பங்கு – இது தொடர்பாக மத்தூர் பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: பனை மரங்களில் கிடைக்கும் பதநீரைக் காய்ச்சி வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி பனை வெல்லத்துக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு இருக்கும். மத்தூர் பகுதியில் போதிய மழையின்மை மற்றும் பனியின் தாக்கம் காரணமாக பனை மரங்களில் பதநீர் சுரப்பது குறைந்து விட்டது. குறிப்பாக, பனை மரங்களில் ஆண்டுதோறும் கிடைக்கும் பதநீரில் மூன்றில் ஒரு பகுதி மட்டும் பதநீர் கிடைத்து வருகிறது. விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டு கிலோ ரூ.140-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். நிகழாண்டில் ரூ.200-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
அரசுக்கு கோரிக்கை: பொது மக்களிடம் நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், சந்தை வாய்ப்பு மற்றும் நல்ல விலை கிடைத்தபோதும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பத நீர் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பனை வெல்லம் தயாரிப்பு 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அழிந்து வரும் பனை மரங்களுக்கு மாற்றாக புதிய மரங்களை உருவாக்க அதிக அளவில் பனை விதைகளை நடவு செய்யவும், பனைத் தொழிலாளர்களைக் காக்கவும் மாநில அரசு மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும். மேலும், ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.