Last Updated:
கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவிரி மாறன் உள்ளிட்ட ஏழு நபர்களுக்கு தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி மாறன் உள்ளிட்ட ஏழு நபர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தயாநிதி மாறன் அனுப்பியுள்ள நோட்டீஸில், சன் டிவி பங்குகளை கடந்த 2003 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நோட்டீஸ் ஜூன் 10, 2025 என தேதியிடப்பட்டுள்ளது.
உங்களில் முதல் மற்றும் இரண்டாவது நபர்களின் (கலாநிதி மற்றும் காவிரி மாறன்) தனிப்பட்ட நலனுக்காக முழு நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கையகப்படுத்த, உங்களில் முதல் நபர், 2 முதல் 8 வரையிலான நபர்களுடன் சேர்ந்து ஏமாற்று மற்றும் தந்திரமான திட்டத்தைத் திட்டமிட்டார். உங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மோசடித் திட்டத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, குடும்பத்தின் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, குறிப்பாக எனது வாடிக்கையாளரின் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் இறந்து போகலாம், மேலும் அவரது உடல்நிலை மோசமடைவது குறித்து முழு குடும்பமும் கவலைப்பட்டபோது, உங்களில் முதல் நபர் மற்றும் 2ஆம் நபர் செப்டம்பர் 2003இல் உங்கள் முதல் சட்டவிரோத நடவடிக்கையைத் தொடங்கினர் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் முழு பங்குதாரர் நிலையையும் 15.09.2003 அன்று இருந்த அசல் நிலைக்கு கலாநிதி மாறன் மீட்டெடுக்க வேண்டும் என்றும், பங்குகளை அதன் உரிமையாளரான எம்.கே. தயாளு மற்றும் மறைந்த எஸ்.என். மாறனின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு ஒரு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், தற்போது இரண்டாவது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த நோட்டீஸ் கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி மாறன் உட்பட ஏழு நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் கவனத்துக்குள்ளாகியுள்ளது.
June 19, 2025 9:54 PM IST


