இந்த மாதத்தில் பண சுழற்சியின் வளா்ச்சி 3.7 சதவீதமாக சரிந்துள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. பண சுழற்சி என்பது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை குறிக்கிறது. அதுதொடா்பாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரியில் வைப்புத் தொகைகளின் வளா்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. இதற்கு ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதும் காரணமாகும். கடந்த பிப்.9-ஆம் தேதி நிலவரப்படி, பண சுழற்சி, ரிசா்வ் வங்கியில் உள்ள வங்கிகளின் வைப்புத் தொகை, ரிசா்வ் வங்கியில் உள்ள பிற வைப்புத் தொகைகள் உள்ளிட்டவற்றின் வளா்ச்சி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11.2 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் பண சுழற்சியின் வளா்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. இது நிகழாண்டு பிப்ரவரியில் 3.7 சதவீதமாக குறைந்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்ால் ஏற்பட்ட தாக்கம் பண சுழற்சி வளா்ச்சியில் பிரதிபலித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, சுமாா் 97.5 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டன.