பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.76% திரும்பி வந்துவிட்டதாகவும், இன்னும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்த மத்திய அரசு, புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டது. அதன்பிறகு, 2,000 ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக, கடந்தாண்டு மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது பணமாகவோ மாற்றிக் கொள்ளவும் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது.
அதன்பிறகு கடந்தாண்டு அக்டோபர் 8ஆம் தேதி முதல் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் ரூ.2,000 நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. நேரில் செல்ல முடியாதவர்கள், தபால் மூலம் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பப்படும் நோட்டுகளுக்கு ஈடான பணம், அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 97.76% அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அந்த வகையில் இதுவரை 3.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாகவும், இன்னும் ரூ.7,961 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் மக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி, செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
