Last Updated:
முதலீடு ஆலோசகர் பட்டாபிராமன் Disco With KS நிகழ்ச்சியில், முதலீட்டுக்கு முன் செய்ய வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
“உங்களின் ஊதியத்தில் இருந்து குறைந்தது 10% பணத்தை எதிர்பாராத செலவுக்கான தொகையாக சேமிக்க வேண்டும். இதுதான் முதலீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக முதலில் செய்ய வேண்டியது” என முதலீடு ஆலோசகர் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.
ஐ.ஐ.டி. பேராசிரியரும், முதலீடு ஆலோசகருமான முனைவர் பட்டாபிராமன் Disco With KS நிகழ்ச்சியில் பங்கேற்று நிதி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில் குறிப்பாக முதலீடு செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது; “மாதம் ஊதியம் வாங்குவோர், முதல் ஆறு மாதத்தில் இருந்து அதிகபட்சம் இரண்டு வருடங்களுக்கு முதலீடு பற்றியே சிந்திக்கக் கூடாது. அந்தக் காலத்தில் அவர்கள், தங்களின் ஊதியத்தில் இருந்து குறைந்தது 10% பணத்தை எதிர்பாராத செலவுக்கான தொகையாக சேமிக்க வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வங்கிக் கணக்கு இல்லாமல், வேறு ஒரு வங்கிக் கணக்கைத் துவங்கி அதில், மாதம் குறிப்பிட்டத் தொகையை சேமிக்க வேண்டும். அதனை அவசர எதிர்பாராத செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, வேறு எந்தக் காரணத்திற்கும் எடுக்கவே கூடாது.
இது ஏன் அவசியம் என்றால், ஒருவர் முதலீடு செய்யத் தொடங்குகிறார் என்றால், திடீரென அவருக்கு அவசரத் தேவை ஏற்படும்போது, அவர் தனது முதலீட்டுப் பணத்தில் இருந்துதான் அதனை எடுப்பார். அப்போது முதலீடு தடைப்படும். எனவே அதற்கு மாற்றாக எதிர்பாராத செலவுக்கென ஒரு தொகையை எடுத்துவைத்துவிட்டால், தங்கள் முதலீட்டை அவர்கள் பெரும் அளவில் பாதுகாக்க முடியும். அடுத்தது, மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டை முறையாக வைத்திருக்க வேண்டும்.
எதிர்பாராத செலவுக்கான பணம், மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ஆகிய மூன்றைத் தயார் செய்துவிட்டுதான் ஒருவர் முதலீட்டில் ஈடுபட வேண்டும். இவை மூன்றும் இல்லாமல், முதலீடு செய்யும் பட்சத்தில், உங்கள் முதலீடு தடைப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
November 23, 2025 4:15 PM IST
பணப் பிரச்சனை இல்லாமல் பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி? – ஆலோசகர் பட்டாபிராமன் கொடுக்கும் டிப்ஸ்


