பட்டென உயர்ந்த பணவீக்கம்.. ஒரே மாதத்தில் இப்படியா..? ஆர்பிஐ கையில் எடுக்கப்போகும் சாட்டை!
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் சந்தை கணிப்பை காட்டிலும் அதிகமாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் வெங்காயம், சர்க்கரை உள்ளிட்ட முக்கியமான நுகர்வு பொருட்களின் விலை உயர்ந்துள்ள வேளையில் இப்பணவீக்க தரவுகள் சந்தையில் நிலவும் சூழ்நிலையை படம்போட்டு காட்டுகிறது.
ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.45% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாத பணவீக்கம் 4.82% ஆக பதிவாகியுள்ளது. இது ஜனவரி மாதத்தில் பதிவான அதிகபடியான பணவீக்கம் அளவீடாகும். ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க தரவுகளை பார்க்கும் போது பருவநிலை மாற்றம் காரணமாக உணவு பொருட்கள் விலை உயர்வும், எரிபொருள் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகளை தாண்டி பிற துறைகளிலும் பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இதனால் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆர்பிஐ கடைசியாக 2023ல் வட்டியை உயர்த்தியது, கடைசியாக நடந்த கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 5.25 சதவீதமாக வைத்துள்ளது.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கி மிக முக்கியமான காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு தான், இந்தியா தனது சேவையில் சுமார் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு நாட்டின் பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 109 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 104 டாலராகவும் உயர்ந்துள்ளது. எல் நினோ காரணமாக இந்தியாவில் உணவு பணவீக்கம் 5.52 சதவீதத்தில் இருந்து 5.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், கல்வி போன்ற இதர துறையிலும் பணவீக்கம் 4 சதவீதத்தை தாண்டியுள்ளது. ரியல் எஸ்டேட், தண்ணீர், மின்சாரம், எரிவாயு மீதான பணவீக்கம் 2.16 சதவீதத்தில் இருந்து 2.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

