Tamilnadu
oi-Vishnupriya R
தருமபுரி: புதிய தலைமைச் செயலகம் அறிவிப்பில் மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது முக்கியமானது, முதல்வர் நல்ல முடிவெடுப்பார் என தருமபுரியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் அரசு கல்லூரி சமூக நீதி மாணவர் விடுதி மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதி கட்டடத்தை தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவியர் விடுதி மற்றும் மாணவர் விடுதிகளில் நுழைந்து ஆய்வு செய்து மாணவர்களிடம் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னியரசு, தருமபுரி அரசு கல்லூரி அருகே மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. அதனருகில் மாணவியர் விடுதியும் அமைந்துள்ளது.
இந்த விடுதிகளை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் மாணவ, மாணவியர் உணவு மற்றும் விடுதி பராமரிப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இக்கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசை பொறுத்தவரையில், மாணவ, மாணவியர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சமூக நீதித்துறை மானிய கோரிக்கையின்போது, விடுதியில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவுத் தொகை மற்றும் பராமரிப்புத் தொகை ஆகியவை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் ரூ.11 கோடியில் மாணவியர் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த விடுதியில் நூலகம், விளையாட்டுக்கு தேவையான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. இந்த விடுதிக் கட்டடம் அடுத்த மாதம் திறக்கப்பட்டு மாணவியர் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, பாலக்கோடு கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி தேவை உள்ளிட்டவை குறித்து அரசு கவனத்தில் கொள்ளப்படும்.
தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, ஓமந்தூரார் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினார். ஆனால் அது பின்னாளில் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
அதேபோல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் புதியதாக தலைமைச் செயலகம் கட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், பல்வேறு எதிர்ப்புகளின் காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரூ.1200 கோடியில் பட்டிப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை. அதே நேரத்தில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதும் முக்கியமாகும். இதுகுறித்து முதல்வர் உரிய முடிவுகளை எடுப்பார் என தெரிவித்தார்.

