பட்டர்வொர்த் | மார்ச் 08, 2026:
பட்டர்வொர்த், ஜாலான் தெலுக் ஆயிர் தாவார் (Jalan Telok Air Tawar) அருகே உள்ள 5 மீட்டர் ஆழமான கிணற்றில் தவறி விழுந்து இரண்டு நாட்களாகச் சிக்கியிருந்த 63 வயது முதியவர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டார்.
வீடற்ற நிலையில் (Homeless) வாழும் 63 வயது முதியவர், குளிப்பதற்காக அந்தக் கிணற்றிற்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக உள்ளே விழுந்துள்ளார். சுமார் 16 அடி (5 மீட்டர்) ஆழமுள்ள அந்தக் கிணற்றில் அவரால் வெளியே வர முடியாமல் இரண்டு நாட்களாகத் தவித்துள்ளார்.
கிணற்றில் இருந்த நீர்மட்டம் அவரது நெஞ்சு அளவு மட்டுமே இருந்ததால், அவர் நீரில் மூழ்காமல் இரண்டு நாட்களாகத் தாக்குப்பிடித்துள்ளார்.
நேற்று மாலை கிணற்றுக்குள் முதியவர் இருப்பதைச் சில பொதுமக்கள் கண்டறிந்து, தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே அவரை வெளியே இழுத்து மீட்டனர்.
மாலை 5:29 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, பட்டர்வொர்த் தீயணைப்பு நிலைய வீரர்கள் 9 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்றதாக அவர் கூறினார்.
மேலும் முதியவருக்குச் சிறு காயங்களும் கடும் சோர்வும் ஏற்பட்டுள்ளது என்றார். சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, அவர் மேலதிக சிகிச்சைக்காகச் சுகாதார அமைச்சக ஊழியர்களால் செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.




