இந்திய பாதுகாப்பு அமைச்சு, 156 இலகுரக யுத்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் ஹெலிகொப்டர் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹிந்துஸ்தான் ஏரோநோட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவிருக்கின்றன. அதற்குரிய முன்மொழிவுக்கான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இந்திய விமானப்படையினருக்கும் இராணுவத்தினருக்குமென கொள்வனவு செய்யப்படும் இந்த 156 இலகுரக தாக்குதல் ஹெலிகொப்டர்களும் 45 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த 156 ஹெலிகொப்டர்களில் 90 இராணுவத்திற்காகவும் 66 விமானப் படையினருக்காகவும் கொள்வனவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் என்ற பெயர் கொண்ட இந்த ஹெலிகொப்டர், ஐயாயிரம் மீற்றர் உயரத்தில் தரையிறங்கவும் பயணிக்கவும் கூடியதாக விளங்குவதோடு சியாச்சின் மற்றும் கிழக்கு லடாக்கின் உயரமான பகுதிகளில் செயல்படுவதற்கு ஏற்றதாகவும் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநோட்டிக்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

