Last Updated:
காங்கிரஸ் சர்தார் படேலை வரலாற்றில் இருந்து அழிக்க முயன்றது எனவும், பிரிவு 370 நாட்டிற்கு தொந்தரவு எனவும் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
“சர்தார் படேலை வரலாற்றில் இருந்து அழிக்க காங்கிரஸ் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அவருக்கு சிலை எழுப்பும் போது ஏன் இவ்வளவு செலவு என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது” என பாஜக தேசிய தலைவர் அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், குஜராத் மாநிலம், அட்லாட்ரா பகுதியில் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டா பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஜெ.பி. நட்டா பேசியதாவது; “சர்தார் படேலை வரலாற்றில் இருந்து அழிக்க காங்கிரஸ் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அவர் நினைவுக்கூரப்படக்கூடாது என்பதற்காகவும், அவரது பெயர் மறைந்து போக வேண்டும் என்பதையும் காங்கிரஸ் விரும்பியது.
இந்தியாவின் இரும்பு மனிதர், வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்படாமல் இருக்க காங்கிரஸ் பாடுபட்டது. ஆனால், சர்தார் படேல் யார், அவரது ஆளுமை என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உலகின் மிக உயரமான ஒற்றுமை சிலையை மோடி கட்ட முடிவு செய்தபோது, இவ்வளவு பணம் ஏன் செலவிடப்படுகிறது என காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியது.
மேலும் படேலின் 182 மீட்டர் சிலை நிறுவப்பட்டபோது, இதன் மூலம் என்ன சாதிக்க முடியும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் இருந்த 562 சமஸ்தானங்களை சர்தார் படேல் ஒன்றாக இணைத்தார்.
ஜம்மு & காஷ்மீரை ஆண்டு வந்த மகாராஜா ஹரி சிங்கையும் அணுகல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார். இருந்தபோதிலும், சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370-ஐ நேரு வழங்கினார். பிரிவு 370 நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகவும் தொந்தரவாக மாறியது. இது நேருவால் மேற்கொள்ளப்பட்டது” இவ்வாறு அவர் பேசினார்.
November 29, 2025 6:26 PM IST
“படேல் வரலாற்றை அழிக்க முயற்சித்த காங்கிரஸ்.. பிரிவு 370 நாட்டிற்கு தொந்தரவு” – அமைச்சர் ஜெ.பி. நட்டா


