Last Updated:
ஈரானுடன் இந்தியா நடத்திய தொடர் பேச்சுவார்த்தையால் பதற்றம் நிறைந்த ஹோர்முஸ் நீரிணையை இந்தியக் கப்பல்கள் கடக்க ஈரான் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள சூழலில் 92 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் எரிவாயு உடன் இரு இந்தியக் கப்பல்கள் நாளையும், நாளை மறுநாளும் குஜராத் வந்தடைய உள்ளன.
ஈரானுடன் இந்தியா நடத்திய தொடர் பேச்சுவார்த்தையால் பதற்றம் நிறைந்த ஹோர்முஸ் நீரிணையை இந்தியக் கப்பல்கள் கடக்க ஈரான் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்த நிலையில், உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஹோர்முஸை கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்கி அழிப்போம் என்றும் எச்சரித்தது. இதனால் கப்பல்கள் இந்தியாவுக்கு வராமல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.
இந்நிலையில், ஈரானிய அதிபர் பெசெஸ்கியானுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்ச்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து 4 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியாவின் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு இந்தியக் கப்பல்களை, ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதித்துள்ளது ஷிவாலிக் கப்பலில் 55 ஆயிரம் டன் எல்பிஜி எரிவாயுவும், நந்தா தேவி கப்பலில் 46 ஆயிரம் டன் எரிவாயுவும் வந்துகொண்டிருக்கின்றன.
வளைகுடாவில் தற்போது 20-க்கும் மேற்பட்ட இந்தியக் கப்பல்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜக்பிரகாஷ் என்ற கப்பலும் ஓமனில் இருந்து கச்சா எண்ணெயுடன் இந்தியா புறப்பட்டுள்ளது.


