Last Updated:
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவனம் முதல்முறையாக பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. ஒரு பங்குக்கு 1,119 ரூபாய் என்ற விலையில் 30,213 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது.
பங்குச்சந்தைகளில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் காலை 10 மணி அளவில் பட்டியலிடப்பட்டன. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முன்னிலையில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மணி அடித்து தொடங்கி வைத்தனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவனம் முதல்முறையாக பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. ஒரு பங்குக்கு 1,119 ரூபாய் என்ற விலையில் 30,213 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான முன்பதிவில், திட்டமிட்டதில் 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்துசேர்ந்தன.
இதனைத் தொடர்ந்து, பங்குகள் ஒதுக்கீட்டுப் பணிகள் நேற்று இறுதிசெய்யப்பட்டன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவன பங்குகள் இன்று காலை 10 மணிக்கு பட்டியலிடப்பட்டன. பங்குகளைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், அதனைப் பெற முடியாதவர்கள், பங்குச்சந்தை மூலம் பெற முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், ஜியோ ஃபிளாட்பார்ம் பங்கு விலை உயரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவனத்தின் பங்குகள் முதன்முறையாக பட்டியலிடப்பட்ட நிலையில், முன்னதாக மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, உரையாற்றினார். அவர் பேசும்போது, “ஜியோ உங்களால் உருவானது. உங்கள் கனவுகளை நிறைவேற்றுவது தான் எங்களுடைய எண்ணம். ஜியோ குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நன்றி. ஜியோ இன்று என்ன நிலையில் இருக்கிறதோ அதற்கு நீங்கள் தான் காரணம். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர் நிர்வாக இயக்குநர் இஷா அம்பானி உரையாற்றினார். “இன்னும் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன் தொடக்கம் தான் இது. ஜியோவை நம்பி முதலீடு செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி” என்றார்.
ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி பேசுகையில், “ஜியோ பங்கு வெளியீடு ‘பிளாக்பஸ்டர் வெற்றி’ பெற்றுள்ளது. என்னை பொறுத்தவரை இது புதிய அனுபவமாக இருந்தது. ஜியோவின் புதிய பங்குதாரர்களுக்கு என் மனதிலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு காரணமாக ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் நன்றி. கடந்த 50 ஆண்டுகளில் ரிலையன்ஸ் செய்ததை, அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஜியோ தொடர்ந்து செய்யும். உலக அளவில் பெருமை மிக்க நிறுவனமாக ஜியோவை கொண்டு செல்வோம். ஜியோவின் வருகையால் இந்தியாவின் இணைய சேவை மேம்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத மலை பகுதிகளிலும் தற்போது ஜியோ சேவை கிடைக்கிறது” என்றார்.


