Last Updated:
அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் பண்டிகை காலத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் நோ-காஸ்ட் EMI ஆஃபர்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் கூடுதல் வட்டியின்றி பொருட்களை வாங்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் பண்டிகை காலமானது அக்டோபர் மாதம் வரை நீடிக்கவுள்ள இந்த சமயத்தில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனைகளை அதிகரிப்பதற்காக பல்வேறு விதமான ஆஃபர்களை வெளியிடுவது வழக்கம். அவற்றில் நோ-காஸ்ட் EMI திட்டங்கள் மிகவும் பிரபலமான ஒரு ஆப்ஷனாக இருந்து வருகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் வட்டியும் செலுத்தாமல் அதிக விலை கொண்ட பொருட்களை வாங்கி மகிழலாம்.
ஏற்கனவே சுதந்திர தின விற்பனைகள் ஆரம்பிக்கப்பட்டு எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆபரணங்களில் கூட நோ-காஸ்ட் EMI அதிகமாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்ம்கள் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் (NBFC) இணைந்து விற்பனைகளை அதிகரிப்பதற்கான பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். எனினும் இந்த நோ-காஸ்ட் EMI திட்டங்கள் மூலமாக பொருட்களை வாங்குவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது.
நோ-காஸ்ட் EMI என்பது ஒரு பொருளுக்கான விலையை எந்த ஒரு வட்டியும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் தவணைகளாக பிரித்து தரும் ஒரு பேமெண்ட் திட்டமாக அமைகிறது. முழுமையான பணத்தை செலுத்துவதற்கு பதிலாக 3 முதல் 24 மாதங்கள் என்ற கால அளவில் இந்த நிலையான தவணை தொகைகளை நீங்கள் செலுத்த வேண்டும். இதில் நோ-காஸ்ட் என்பது ஒரு பொருளின் மொத்த விலையை குறிக்கிறது. இதற்கான வட்டியை விற்பனை செய்பவர் அல்லது நிதி வழங்குபவர் ஏற்றுக்கொள்வார்.
விழாக்கால விற்பனைகளின் போது இ-காமர்ஸ் வெப்சைட்டுகளில் ஷாப்பிங் செய்யும் சமயத்தில் குறிப்பிட்ட சில ப்ராடக்டுகளுக்கு நோ-காஸ்ட் EMI ஆப்ஷன் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருக்கும். உங்களுடைய வங்கி அல்லது கிரெடிட் கார்டு மற்றும் தவணையை செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் வரம்பை பொறுத்து பிளாட்ஃபார்ம் அல்லது நிதி வழங்குபவர் அதனை உடனடியாக அங்கீகரிப்பார். இதற்கான தகுதி என்பது பெரும்பாலும் நல்ல கிரெடிட் ஸ்கோர், உங்களுடைய கார்டில் போதுமான அளவில் லிமிட் மற்றும் சில சமயங்களில் குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படலாம்.
உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் மதிப்பிலான ஒரு ஸ்மார்ட் போனை விழாக்கால விற்பனையில் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இதற்கு நீங்கள் உங்களுடைய வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி 6- மாத நோ்காஸ்ட் EMI ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால், 50,000 ரூபாயை ஆறாக பிரிக்கும் போது அதற்கான மாதத் தவணை என்பது 8,333 ரூபாயாக இருக்கும். இதில் எந்த ஒரு வட்டியும் சேர்க்கப்படவில்லை. எனவே மொத்தமாக நீங்கள் பொருளுக்கான 50,000 ரூபாயை மட்டுமே செலுத்துவீர்கள்.
வட்டி இல்லாத ஆப்ஷன் என்று மார்க்கேட் செய்யப்பட்டாலும் ஒரு தவணையை நீங்கள் செலுத்த தவறினால் கூட அதற்கான கூடுதல் கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டும். மேலும் அபராதங்களை GST வரியோடு செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசானில் GST உட்பட செயலாக்க கட்டணம் என்பது 1.18 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது மற்றும் தாமதமாக பேமெண்ட் செலுத்துவதால் நீங்கள் செலுத்தக்கூடிய கூடுதல் கட்டணங்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
முதலில் 0-காஸ்ட் என்ற வார்த்தை உண்மை கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு லட்ச ரூபாய் பொருளுக்கு ‘நோ காஸ்ட்’ என்பது அந்த பொருளின் முழு விலையை செலுத்துவதாக அர்த்தம். இதுவே பணமாக கொடுப்பவர்களுக்கு இந்த ப்ராடக்ட்டில் 8 முதல் 10 சதவீத ஆஃபர் கொடுக்கப்பட்டு, இதனால் அந்த ப்ராடக்ட்டின் மொத்த விலையில் இருந்து 8000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் குறையும்.
அதுமட்டுமல்லாமல் இதற்கான பிராசஸிங் கட்டணம் 1 முதல் 2 சதவீதம் மற்றும் GST போன்றவை உங்களுடைய சேமிப்புகளை மேலும் குறைத்து விடும். இரண்டாவதாக இந்த மாதிரியான ஆப்ஷன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் கடன் வலைக்குள் மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் ஒரு வேலை EMI தொகை உங்களுக்கு வழங்கப்பட்ட லிமிட்டை விட 30 சதவீதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இது உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதத்தை அதிகரித்து அதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
பணப்புழக்கத்தை பாதிக்காத வரையில் EMIகளை தேர்வு செய்வது அவசியம். அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு நோ-காஸ்ட் EMI ஆப்ஷனை தேர்வு செய்வது அனாவசியமானது. பர்சனல் லோன்களோடு இதனை ஒப்பிட்டு பார்த்து எது குறைவாக இருக்கிறதோ அந்த ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். மேலும் 2025 விழாக்கால விற்பனையில் பல்வேறு பிளாட்ஃபார்ம்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்து உண்மையான டீலை பயன்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.
August 15, 2025 11:54 AM IST


