
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிள்களில் நடத்திய விடியற்கால தாக்குதல்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜர் மாநிலத்தில் உள்ள மூன்று கிராமங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AFP செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய உள்ளூர் தகவல்களின் படி, ஆயுததாரிகள் கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதுடன், சிலரை கொலை செய்து வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர். மேலும், எத்தனை பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இந்த தாக்குதல்கள் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ஜிஹாதி படுகொலை நடைபெற்ற பகுதிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளன. அந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
நைஜீரியாவில் “பாண்டிட்கள்” என அழைக்கப்படும் ஆயுத குற்றக் கும்பல்கள் பல ஆண்டுகளாக தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சமீப காலமாக இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
துங்கா-மேகெரி கிராமத்தில் முதலில் தாக்குதல் நடத்தப்பட்டதாக நைஜர் மாநில பொலிஸ் பேச்சாளர் வாசியு அபியோடுன் தெரிவித்துள்ளார். அங்கு ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், சிலர் கடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அடுத்து தாக்கப்பட்ட கொன்கோசோ கிராமத்தில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள பல வீடுகள் எரிக்கப்பட்டதுடன் நான்கு பெண்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் பாண்டிட்கள் பிசா கிராமத்திற்குச் சென்று ஒரு பொலிஸ் நிலையத்துக்கு தீ வைத்ததுடன் ஒருவரை கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று கிராமங்களிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 32 என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ள நிலையில், AFP குறைந்தது 46 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது. அருகிலுள்ள பிற கிராமங்களில் மேலும் தாக்குதல்கள் நடந்திருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் நிலவுகிறது.
பாதுகாப்பு அறிக்கையின்படி, 41 மோட்டார் சைக்கிள்களில் இரண்டு அல்லது மூன்று பேர் வீதம் ஆயுததாரிகள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வடமேற்கு பகுதியில் ஜிஹாதி குழுக்கள் மற்றும் நாட்டின் தென்கிழக்கில் பிரிவினைவாத கிளர்ச்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், வன்முறையை கட்டுப்படுத்த நைஜீரிய தலைவர்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
