புதுடெல்லி: ‘‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சொத்துகளை விற்க நினைக்கவில்லை. அதை காப்பாற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சித்தது’’ என்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதாடினார்.
அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜேஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவகர்லால் நேரு தொடங்கினார். இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோருக்கு மாற்றப் பட்டன. ஆனால், ரூ.2,000 கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விஷால் காக்னி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா வாதாடியதாவது: ஏஜேஎல் நிறுவனத்தை நெருக்கடியில் இருந்து காப்பாற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. அந்த நிறுவனத்தின் சொத்துகளை விற்பதற்கு அல்ல. ஏனெனில் ஏஜேஎல் நிறுவனம் சுதந்திர போராட்ட தியாகிகளின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. ஏஜேஎல் கொள்கைதான் காங்கிரஸ் கொள்கையாக இருக்கும் என்று நிறுவனத்தின் மெமரேண்டம் ஆப் அசோசியேஷன் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
நிறுவனம் எந்த வருவாயும் ஈட்டவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு ஏஜேஎல் நிறுவனம் வர்த்தக நிறுவனமாகவும் இல்லை.
ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சித்தது. ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த கடனை திருப்பி பெற வேண்டும் என்பது பிரச்சினை இல்லை. அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை. ஏஜேஎல் நிறுவனத்தின் சொத்துகளை விற்று லாபம் பார்க்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல.இவ்வாறு வழக்கறிஞர் சீமா வாதாடினார்.