Last Updated:
டீசல், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்ததால், 2026 தீபாவளிக்கு பட்டாசு விலை 25 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு 25 சதவீதம் பட்டாசு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பட்டாசு உற்பத்தியை தங்களது தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தற்போது கையிருப்பிலுள்ள பட்டாசு ரகங்களை விற்பனை செய்ய முடியாமல் திக்கு முக்காடி வருகின்றனர். அதாவது அரையிறுதி சீசன் காலத்தில் வட மாநிலங்களில் சரிவர திருமண நிகழ்ச்சிகள் இல்லாததால் வியாபாரிகள் பட்டாசுகளை கொள்முதல் செய்ய சிவகாசியை நாடவில்லை என பட்டாசு தயாரிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு ஆசிய நாடுகளின் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வினால் பட்டாசு தயாரிக்கத் தேவையான முக்கிய மூலப் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து டீசல் விலை உயர்வினால் 25 சதவீதம் வரை லாரி வாடகையை உயர்த்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. லாரி சம்மேளனத்தின் இந்த திடீர் அறிவிப்பு பட்டாசு உற்பத்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏற்கனவே போர்ப் பதற்றம் காரணமாக பட்டாசு உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு, அரையிறுதி சீசனில் வட மாநிலங்களில் போதிய அளவிலான பட்டாசு விற்பனை இல்லாமை போன்ற காரணங்களுடன், தற்போது லாரி வாடகை உயர்வும் பட்டாசுத் தொழிலை முடக்கியுள்ளது. எனவே கடந்தாண்டின்(2025) தீபாவளிப் பண்டிகைப் பட்டாசு விற்பனை விலையை விட நடப்பாண்டில்( 2026) தீபாவளிக் கொண்டாட்டப் பட்டாசுகளின் விலை 25 சதவீதம் வரை விலை உயர்வு இருக்குமென பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் தீபாவளி பண்டிகை.. பட்டாசு விலை உயரும் அபாயம்.. உற்பத்தியாளர்கள் சொன்ன ஷாக் தகவல்!


