நெதர்லாந்து நாட்டு இளவரசியையும் அவரது தங்கையையும் கொலை செய்யத் திட்டமிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து அரச குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் அரியணையின் அடுத்த வாரிசான இளவரசி கத்தரீனா-அமாலியா (வயது-22) மற்றும் அவரது தங்கை இளவரசி அலெக்ஸியா (வயது-20) ஆகியோரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
கடந்த 2022 ஆம் ஆண்டு இளவரசிக்கு ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து வந்த கடத்தல் மிரட்டல் காரணமாக அவர் தனது கல்லூரி விடுதி வாழ்க்கையைத் துறந்து அரண்மனைக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

இதையடுத்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் ஒரு வருடம் ரகசியமாக ஸ்பெயினில் தங்கி கல்வி கற்றுள்ளார்.
இந்த நிலையில் இளவரசிகளைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 33 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சதி திட்டம்
ஹேக் நகரில் கைது செய்யப்பட்ட அந்த வாலிபரிடம் இருந்து அமாலியா, அலெக்சியா மற்றும் ‘ரத்த குளியல்’ ஆகிய வார்த்தைகள் எழுதப்பட்ட கையெழுத்துக் குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரு கோடரிகளில் அலெக்சியா, மொசாத் மற்றும் சீக் ஹெய்ல் எனப் பொறிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இளவரசிகளைக் கொலை செய்யும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

