Last Updated:
நீட், நெட் தேர்வு வினாத்தாள்கள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை. மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல்காந்தி குற்றச்சாட்டு.
நீட் தேர்வைத் தொடர்ந்து நெட் தேர்வு வினாத்தாளும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கு தகுதித் தேர்வான ‘யு.ஜி.சி. ’நெட்’ தேர்வு கடந்த 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நெட் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 30 ஆம் தேதி சமூகவியல் தேர்வு நடைபெறுவதற்கு சற்று முன்னதாக 100 பக்கங்கள் கொண்ட ஒரு PDF பரப்பப்பட்டதாகவும், அதில் உள்ள சுமார் 90 கேள்விகள் உண்மையான சமூகவியல் வினாத்தாளுடன் அப்படியே பொருந்துவதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வினாத்தாள் பிகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தலா 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ராகுல் காந்தி, இந்த வினாத்தாளை கசியவிட்ட கும்பல், CSIR-NET, HTET மற்றும் ADA போன்ற வரவிருக்கும் தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் விற்பனை செய்ய முன் வந்திருப்பதாக சாடியுள்ளார்.
நீட் மற்றும் நெட் தேர்வுகளில் மீண்டும் மீண்டும் ஊழல்கள் வெளிவந்த பிறகும், மோடி அரசு கண்களை மூடிக்கொண்டு உறங்குவதாகவும், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடமிருந்து எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்பார்ப்பது வீண் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் என்றும் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.


