குடிவரவு துறை தலைமை இயக்குநர் சகரியா ஷாபான், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறினார்.
குடிவரவு துறை, இரட்டை குடியுரிமை கொண்ட இஸ்ரேலிய குடிமக்கள் ஜொகூர் மாநிலத்தின் பாரஸ்ட் சிட்டியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு சமூகமான நெட்வொர்க் ஸ்கூல் (Network School)-இல் பங்கேற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
நெட்வொர்க் ஸ்கூல் (Network School) உடன் தொடர்புடைய 19 பேரின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை என்று குடிவரவு துறை தலைமை இயக்குநர் சகாரியா ஷாபான் (Zakaria Shaaban) தெரிவித்துள்ளார்.
ஹரியான் மெட்ரோ (Harian Metro) வெளியிட்ட செய்தியின்படி, ஜொகூரில் (Johor) உள்ள இந்த தொழில்நுட்பக் குடியிருப்பு (tech commune) திட்டத்துடன் தொடர்புடையதாக மொத்தம் 430 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 210 பேர் இன்னும் மலேசியாவில் உள்ளனர், 201 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“மீதமுள்ள 19 பேர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்ற சாத்தியம் உள்ளது.”
இன்று நடைபெற்ற 104வது குடிவரவு துறை தின விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நெட்வொர்க் ஸ்கூலுடன் தொடர்புடைய 379 வெளிநாட்டினரை நாங்கள் விசாரித்துள்ளோம். இதுவரை இரண்டு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளின் அடிப்படையில், எந்தவித சட்டவிரோத நடவடிக்கைக்கான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
நெட்வொர்க் ஸ்கூல் குறித்து சமூக ஊடகங்களில், சில இஸ்ரேல் நாட்டவர்கள் வேறு நாடுகளின் கடவுச்சீட்டுகளை (second-country passports) பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்து, அந்தத் திட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்டதையடுத்து, இந்த அமைப்பு பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.
2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நெட்வொர்க் ஸ்கூல் (Network School) என்பது, காயின்பேஸ் (Coinbase) நிறுவனத்தின் முன்னாள் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியும் முதலீட்டாளருமான பாலாஜி ஸ்ரீனிவாசன் அவர்களால் ஃபாரஸ்ட் சிட்டியில் (Forest City) தொடங்கப்பட்ட ஒரு தனியார் குடியிருப்புச் சமூகமாகும்.
