கோலாலம்பூர்:
16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாலை 7:30 மணி வரையிலான அதிகாரப்பூர்வமற்ற தொடக்கக் கட்ட வாக்கு எண்ணிக்கையின்படி, பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
முக்கியத் தொகுதிகளின் நிலவரம் (அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்):
ஜெராம் பாடாங் (Jeram Padang): BN வேட்பாளர் டத்தோ முகமட் ஜைடி அப்துல் காதிர் 3,004 வாக்குகளைப் பெற்று 2,213 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையில் உள்ளார்.
சென்னா (Chennah): BN வேட்பாளர் சியோவ் கோங் சூன் 4,222 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். PH சார்பில் போட்டியிடும் அம்மாநில முன்னாள் அமைச்சரும் முக்கியத் தலைவருமான அந்தோணி லோக் 3,528 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்
லிங்கி (Linggi): BN வேட்பாளர் டத்தோ முகமட் ஃபைசல் ரம்லி 4,099 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இங்கு போட்டியிடும் PH வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான டத்தோஸ்ரீ அமினுதீன் ஹரூன் 2,615 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
பெர்தாங் (Pertang): BN வேட்பாளர் டத்தோஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் 1,401 வாக்குகள் பெற்றுத் தொடக்க முதலே வலுவான முன்னிலை வகிக்கிறார்.
சுவா (Chuah): PH வேட்பாளர் யியூ பூன் லாய் 3,717 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பிஎன் வேட்பாளர் பாவ் ஜியூ சிங் 2,045 வாக்குகள் பெற்றுள்ளார்.
மாலை 7:30 மணி நிலவரப்படி, அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அஷ்ரஃப் வஜ்தி டுசுகியின் கூற்றுப்படி, BN கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் (PH) தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி, நகர்ப்புறப் பகுதிகளில் PH கூட்டணி 13 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பெரிக்காத்தான் நேஷனல் (PN): 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகள் இரவு 10:00 மணிக்கு மேல் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



