கோலாலம்பூர்:
16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஆகஸ்ட் 1, சனிக்கிழமை) மாலை 5:00 மணிக்குத் தொடங்கியது.
மாநிலம் முழுவதும் உள்ள 8 அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையங்களில், தேர்தல் ஆணைய அதிகாரிகளால் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள்/பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதில் சுமார் 12,000 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி வெளியிட்ட தகவல்படி, தேர்தல் ஆணையம் மொத்தம் 13,263 தபால் வாக்களிப்புச் சீட்டுகளை விநியோகித்திருந்தது.
இதில் பிரிவு 1A இல் தேர்தல் பணியாளர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், காவல் துறையினர், ஆயுதப் படையினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 12,669 வாக்குகள் வழங்கப்பட்டன.
பிரிவு 1B இல் வெளிநாடுகளில் வாழும் மலேசியக் குடிமக்களுக்கு 343 வாக்குகள் வழங்கப்பட்டன.
மற்றும் பிரிவு 1C இல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 11 அமைப்புகளின் அதிகாரிகளுக்கு 251 வாக்குகள் வழங்கப்பட்டன.
மாலை 6:00 மணிக்கு அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாதாரண வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட முடிவுகள் இரவு 10:00 மணி அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



