கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மன்னரான யாங் டி-பெர்துவான் பெசார் துங்கு முஹ்ரிஸை பதவியிலிருந்து நீக்குவதாக முன்னாள் சுங்கை உஜோங் ‘உண்டாங்’ (Undang Luak Sungei Ujong) முபாரக் தோஹாக் வெளியிட்ட பிரகடனம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலகா உண்டாங் (Telaga Undang) ஷரீபா நோர்சைதா அல்-கத்ரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முபாரக் தோஹாக் பழக்கவழக்கங்கள் (Adat) அல்லது அரசியலமைப்பு சட்டத்தின்படி தற்போது எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
முபாரக் தோஹாக் கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி ‘டத்தோ கிளானா பெத்ரா’ என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே, அவருக்கு மன்னரை நீக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
“முபாரக் தோஹாக்கின் இந்த நடவடிக்கை மன்னர் துங்கு முஹ்ரிஸுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகமாகும் (Treason). அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என ஷரீபா நோர்சைதா வலியுறுத்தினார்.
இச்செயலுக்கு ‘இபு சோக்கோ’ (Ibu Soko) அல்லது ‘அனக் வாரிஸ்’ (Anak Waris) ஆகிய பாரம்பரிய அமைப்புகள் எந்த அனுமதியோ அல்லது அதிகாரமோ வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் இது குறித்துக் கூறுகையில், முபாரக் தோஹாக்கின் பிரகடனத்தை மாநில அரசு அங்கீகரிக்கவில்லை. இந்த நடவடிக்கை நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின் 10 முதல் 12 வரையிலான பிரிவுகளுக்கு முரணானது.
முபாரக் தோஹாக் ஏற்கனவே ஷரியா சட்டம் மற்றும் பாரம்பரிய வழக்கங்களை மீறியதற்காகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
முபாரக் தோஹாக் முறையான அறிவிப்பின் மூலம் கடந்த ஆண்டே பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற நீதி மற்றும் சட்ட மன்றக் (Dewan Keadilan dan Undang) கூட்டத்திலும் அவர் தனது பதவி நீக்கத்தை ஏற்று அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். இந்நிலையில், அவர் தன்னிச்சையாக மன்னருக்கு எதிராகப் பிரகடனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




