கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட பிரகடனம் சட்டபூர்வமானது என்று மாநில ஆட்சிக் குழு இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, துவாங்கு நாட்ஸாருடின் துவாங்கு ஜாஃபார் நெகிரி செம்பிலானின் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நியமனம் மாநில அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.
“கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட பதவி நீக்கப் பிரகடனத்தில் முறையான பதவியில் இருந்த நான்கு உண்டாங் தலைவர்களும் கையெழுத்திட்டு முத்திரையிட்டனர். தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதி மந்திரி பெசாரும் கையெழுத்திட்டதன் மூலம் மாநில அரசியலமைப்பின் பிரிவு 10(2)-ன் கீழ் இந்தப் பிரகடனம் சட்டப்படி முழுமையடைந்துள்ளது.” என்று மாநில ஆட்சிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதம் நான்கு உண்டாங் தலைவர்கள் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைப் பதவி நீக்கியதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு மலாக்காவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவாங்கு நாட்ஸாருடின் துவாங்கு ஜாஃபார் 12-ஆவது ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார்.
இருப்பினும், கடந்த வாரம் துவாங்கு முஹ்ரிஸைப் பதவி நீக்கும் பிரகடனத்தில் தாம் கட்டாயப்படுத்தப்பட்டே கையெழுத்திட்டதாகவும், அந்த ஆவணம் செல்லாது என்றும் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை நான்கு உண்டாங் தலைவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனிடையே, உண்டாங் தலைவர்கள் பேரவை (DKU) கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரே தொடர்ந்து மாநில ஆட்சியாளராக நீடிப்பார் என்றும், அவரைப் பதவி நீக்கும் சமீபத்திய முயற்சி செல்லாது என்றும் அறிவித்திருந்தது. மேலும், பிரகடனத்தை அமல்படுத்தக் கோரி வெளியான அறிக்கை தொடர்பாகக் காவல் துறையில் புகார் அளிக்கவும் DKU தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதால் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



