சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நுவரெலியாவில் உருவாக்கப்பட்டுள்ள Eagles View Point கழுகு காட்சி முனை நேற்று வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை மேம்பாட்டை கவனத்திற் கொண்டு நாட்டில் பல்வேறு புதிய சுற்றுலா பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் விமானப் படையின் உதவியுடன் மேற்படி கழுகு காட்சி முனை உருவாக்கப்பட்டு நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்க்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேற்படி கழுகு காட்சி முனைக்கான நிர்மாணப் பணிகள் கடந்த 2024 ஜூலை 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில், இலங்கையின் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா சாந்திபுர கிராமத்தை உள்ளடக்கி, எழில் மிகு வகையில் இந்த கழுகு காட்சி முனை உருவாக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்திற்கு தற்போது பெருமளவு உல்லாசப்பிரயாணிகள் வருகை தரும் நிலையில், மேற்படி கழுகு காட்சி முனையிலிருந்து நுவரெலியா நகரம், பீதுறுதாலகால ஹக்கல மலர் பூங்கா, கிகிளியாமான்ன மலைத்தொடர், சிவனொலிபாதமலை, சப்த கன்னி மலைத்தொடர் உள்ளிட்ட பல பகுதிகளையும் பார்வையிட முடியும்.
The post நுவரெலியாவில் கழுகுக் காட்சிமுனை அமைச்சரால் நேற்று திறந்து வைப்பு appeared first on Thinakaran.
