Last Updated:
தாவணகெரே மாவட்டம் நல்லுார் கிராமம் சையத் நுார் வளர்க்கும் நாட்டு கோழி ஒன்று நீல நிற முட்டையிட்டது.
பொதுவாக முட்டைகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளதை காண மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சையத் நுார். இவர் கோழிகள் வளர்க்கிறார். இவரிடம், 10 நாட்டு கோழிகள் உள்ளன. அதன் முட்டைகளை விற்பனை செய்கிறார். முட்டைகளை எடுக்க, கோழிகள் கூடுக்கு சென்ற அவர் அதிர்ச்சி அடைந்தார். நாட்டு கோழிகளில் ஒன்று, வெள்ளை நிறத்துக்கு பதிலாக, நீல நிறத்தில் முட்டையிட்டிருந்தது.
இதையடுத்து உடனடியாக, கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த அதிகாரிகளும் ஆச்சரியம் அடைந்தனர். முட்டை நீல நிறத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்கின்றனர். முட்டை மேற்புற ஓடு மட்டுமே, நீல நிறத்தில் உள்ளது. உட்புறத்தில் வழக்கமான நிறத்தில் உள்ளது. நீல நிற முட்டையை காண, சுற்றுப்புறங்களில் இருந்து, மக்கள் வருகின்றனர். நீல நிற முட்டையிட்ட கோழியை, ஆய்வுக்கு உட்படுத்த கால்நடை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே கோழியிட்ட நீல நிற முட்டையை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து சன்னகிரி கால்நடை பராமரித்துறை உதவி இயக்குனர் அசோகா கூறுகையில், “நீல நிறத்தில் கோழி முட்டை இருப்பதற்கு, மெடுசில் உள்ள பிலிவர்டின் எனப்படும் நிறமி காரணமாக இருக்கலாம். முட்டையின் மேல் பகுதி ஓடு மட்டுமே நீல நிறத்தில் இருக்கும். உள்பகுதியில் வெள்ளை, மஞ்சள் கரு இருக்கும்.
முதல்முறையாக தான் கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. தொடர்ந்து நீல நிற முட்டையிடும் பட்சத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்படும்” என்றார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
August 28, 2025 3:40 PM IST


