செம்மணி மனித புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய விசேட தூதுக்குழுவினரின் செம்மணி விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது என்றும் நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
சர்வதேசத்தின் கண்காணிப்பு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு உட்பட இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரின் இந்த கண்காணிப்பு விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு விசேடமாக எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

