Last Updated:
நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை இன்று காலை கூடியதும் டெல்லியில் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்த நிலையில், சமாஜ்வாதி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பதாகைகளை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து அமளியில் ஈடுபட்டனர். பதாகைகள் வைத்துள்ள உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார். அதனை மீறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதன்பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் கர்நாடகாவில் அரசு ஒப்பந்த பணிகளில் சிறுபான்மையினருக்கு நான்கு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசத் தொடங்கினார். அப்போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை முடங்கியது. இதைத்தொடர்ந்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்.. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமி
இதே கோரிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மாநிலங்களவை 2 மணிக்கு கூடிய நிலையில் மீண்டும் அவையில் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
March 24, 2025 3:03 PM IST


