Last Updated:
என்.சி.இ.ஆர்.டி. பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
என்.சி.இ.ஆர்.டி. வடிவமைத்துள்ள பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்ட நிலையில், நீதித்துறையை அவமதிக்கும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி. வடிவமைத்துள்ள 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதித்துறையின் மீது அவதூறு பரப்புவதற்கு எவர் ஒருவரையும் அனுமதிக்க முடியாது எனவும், ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து இருப்பது போலத் திட்டமிட்டுச் சித்தரிக்க முயற்சி நடப்பதாகவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், என்.சி.இ.ஆர்.டி. நடவடிக்கையால் பார் கவுன்சில் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கலக்கம் அடைந்துள்ளதாகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
நீதித்துறையின் தலைவராக தனது கடமையை தவறாமல் செய்ததாகவும், என்.சி.இ.ஆர்.டி.யின் நடவடிக்கை நீதித்துறையின் மீதான திட்டமிட்ட தாக்குதல் எனவும் தலைமை நீதிபதி கூறினார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
Feb 25, 2026 10:05 PM IST
நீதித்துறையில் ஊழல்; என்.சி.இ.ஆர்.டி. பாடம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கண்டனம்


