Last Updated:
இந்தூரில் நீட் தேர்வின் போது மின்சார தடை ஏற்பட்டதால், மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில் மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த 5ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 வரை நடந்த தேர்வின் போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சில மையங்களில் மின்சார விநியோகம தடைப்பட்டது.
இதனால் மாணவர்கள் இருளிலேயே தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. தேர்வு நேரம் முடிவதற்கு அரை மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், அதாவது மாலை நான்கரை மணியளவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேர்வு எழுத வைத்ததாகவும், இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மறு தேர்வுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறு வழியிலோ தீர்வு கூற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை தரப்பில் நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகாத நிலையில், அடுத்த விசாரணை வரும் வரை தேர்வு முடிவை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வு எழுதியவர்களுக்கு போதிய வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் கூறி இந்த இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அடுத்த விசாரணை 4 வாரங்களுக்குப் பிறகே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்டது போல ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
May 16, 2025 11:12 AM IST


