Last Updated:
NEET தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் பெற்ற 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுக்க மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதற்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆளும் கட்சியான திமுக நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பள்ளிப் படிப்பில் 12ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்றுவந்த நிலையில், இந்தியா முழுவதும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியே நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த நீட் தேர்வின் தேர்ச்சி அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வில் 50% கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றால் மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
அதிலும், நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்த 14 பேரும், மைனஸ் 40 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
இதற்கு காரணம், முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் காலியிடங்கள் அதிகரித்ததால் 0% முறை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்தே ஜீரோ மற்றும் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
September 02, 2025 9:53 PM IST


