Last Updated:
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தீர்மானிக்கும் எத்தனை மணி நேரத்திற்கும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கையை அரசியலாக்கக் கூடாது. இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது முறையல்ல. தீவிரமான இந்தப் பிரச்சினைக்கு ஆழமான விவாதம் தேவை.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சுமார் 150 தேர்வுத்தாள் கசிவுச் சம்பவங்கள் குறித்துப் பேசினார். விசாரணைக்குரிய இந்த விவகாரத்தில், சந்தேகத்திற்கு இடமின்றி அரசு இது குறித்து விசாரித்து, மக்கள் மற்றும் நாட்டிற்கு உண்மையை முன்வைக்கும்.
#WATCH | Delhi: Union Health Minister JP Nadda says, “Leader of the Opposition Rahul Gandhi, gave a presentation and in that presentation, he discussed approximately 150 paper leaks. This is a matter of investigation, and the government, being a responsible government, will… pic.twitter.com/oSkpOHTJPs
— ANI (@ANI) July 22, 2026
வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறுகிய கால விவாதமோ அல்லது நீண்ட கால விவாதமோ. எவ்வளவு நேரம் தேவை என்பதை ‘பணி ஆலோசனைக்குழு’ (Business Advisory Committee) முடிவு செய்யலாம். 12 மணி நேரமோ அல்லது 18 மணி நேரமோ கூட எடுத்துக்கொள்ளலாம். மாநிலங்களவையின் அவைத் தலைவராக, எதிர்க்கட்சிகள் தீர்மானிக்கும் எத்தனை மணி நேரத்திற்கும் விவாதம் நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசு விவாதத்திற்குத் தயாராக உள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கான நிபந்தனைகளை அல்லது நோக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க நாடாளுமன்றமே மிகவும் பொருத்தமான இடம். விவாதத்தின் கால அளவை எதிர்க்கட்சிகள் தீர்மானிக்கட்டும். அதில் அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டு, ஒரு உறுதியான கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் நம்முடையவர்கள், உங்களுடையவர்கள்; அவர்கள் நாட்டின் எதிர்காலம். நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. இந்தப் பொறுப்பு அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவானது. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும், ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கி முன்னேறவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


