கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் ஒன்று அமைந்துள்ளது. இந்த பீச் ரிசார்ட்டுக்கு கடந்த 16ம் தேதி நிஷிதா, பார்வதி, கீர்த்தனா ஆகிய 3 இளம் பெண்கள் வார விடுமுறையையொட்டி பொழுதைக் கழிக்க வந்துள்ளனர். இறுதியாண்டு பொறியியல் படித்து வந்த அந்த மாணவிகள் அன்று இரவு அங்கேயே தங்கியுள்ளனர். மறுநாள் காலை 10 மணியளவில் அங்கிருந்த நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்து பார்த்த ரிசார்ட் ஊழியர்கள் அவர்கள் முவரும் நீரில் செத்து மிதப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர். உடனே உல்லல் போலீசாருக்குத் தகவல் அளிக்க முதல்கட்ட விசாரணையில் இவர்கள் மூவரின் உயிரிழப்பும் ஒரு விபத்து என தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் குறைந்த ஆழமாகவும் மறுபக்கம் சுமார் 6 அடி ஆழமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அறியாத பெண்கள் மூவரும் ஆழம் அதிகமான பகுதியில் சிக்கி உயிரிந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர் போலீசார்
முதலில் ஒரு பெண் நீருக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அவரைக் காப்பாற்ற முயன்று குதித்த மற்ற இரு பெண்களும் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்கள் மூவருக்கு நீச்சல் தெரியாது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் 6 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளத்தில் விழுந்து 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்திருக்க முடியுமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. பெண்கள் மது அருந்தியிருந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்கள் நீச்சல் குளத்தில் இருந்ததை ரிசார்ட் நிர்வாகத்தினர் யாருமே பார்க்கவில்லையா? என்பதும் போலீசாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. பொதுவாக ரிசார்ட்களில் உள்ள நீச்சல் குளங்கள், உயிர்காக்கும் கருவிகளை வழங்குதல், உயிர்காக்கும் காவலர்களை நியமித்தல் மற்றும் குளத்தின் ஆழத்தை தெளிவாகக் குறிப்பிடுவதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் சம்பவத்தன்று அப்பகுதியில் உயிர்காக்கும் பணியாளர் யாரும் இல்லை என்பதும், நீச்சல் குளத்தின் ஆழம் குறித்த இடத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அன்றைய தினம் 7 பேர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர் என்பதும் பெண்கள் அபாயத்தில் இருந்த போது யாருமே அருகில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள உல்லல் போலீசார் ரிசார்ட்டுக்கு சீல் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் ரிசார்ட்டுக்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
